Latestமலேசியா

உடையை ஆர்டர் செய்தவருக்கு செருப்பு அனுப்பி வைக்கப்பட்டதால் அதிர்ச்சி

ஜோகூர் பாரு, பிப் 13 – மின் வர்த்தகம் மூலம் துணி விற்பனையாளரிடம் பாரம்பரிய உடையை ஆர்டர் செய்த தமது மனைவிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பொட்டலத்தில் ஜப்பான் செருப்பு இருந்தது குறித்து அவர் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக ஜோகூர் பாரு தாமான் ஜோகூர் ஜெயாவைச் சேர்ந்த போக்குவரத்து நிறுவன ஒருங்கிணைப்பாளரான P. சுரேஸ் தெரிவித்திருக்கிறார். இந்தியர்களுக்கான பாரம்பரிய உடையை சம்பந்தப்பட்ட துணி நிறுவனத்திடம் ஆர்டர் செய்து இதற்கான 30 ரிங்கிட் கட்டணத்தையும் அனுப்பியிருந்த தமது மனைவிக்கு வந்த பொட்டலத்தில் செருப்பு இருந்ததால் அதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விநியோகிப்பாளரிடமே தமது மனைவி திரும்ப ஒப்படைத்துவிட்டதாக 43 வயதுடைய சுரேஸ் கூறினார். இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் குழந்தைகளுக்கான துணிகளை விற்பனை செய்வதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்திருந்ததால் அதனை நம்பி உடையை தமது மனைவி ஆர்டர் செய்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

பொட்டலம் வந்தவுடன் அதனை பிரித்து பரிசோதித்தபோது இரண்டு ரிங்கிட்டிற்கு விற்கப்படும் ஜப்பான் செருப்பு இருந்துள்ளது. துணிகள் பொட்டலமாக அனுப்பி வைக்கப்படும். ஆனால் தனது மனைவிக்கு ஒரு சிறிய பெட்டியில் அந்த செருப்பு வைக்கப்பட்டிருந்தது. மின் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் பயனீட்டாளர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுரேஸ் கேட்டுக் கொண்டார். அதோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!