
பாங்கி, ஜூலை-20-மலேசியா ஒருநாள் உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியை நடத்தும் என்ற பெரிய கனவைக் கொண்டுள்ளது…
இது ஒரு தொலைநோக்கு இலக்கு என, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ‘ஹரிமாவ் மலாயா’ அணி உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
ஸ்பெயின் – அர்ஜேண்டினா இடையிலான உலகக் கிண்ண இறுதியாட்டத்தை சிலாங்கூர் பாங்கியில், இராட்சத திரையில் இரசிகர்களுடன் அமர்ந்து கண்டுகளித்த நிகழ்வில் சாஹிட் அவ்வாறு சொன்னார்.
எனினும், மலேசியாவின் இந்த உலகக் கிண்ணத் திட்டத்திற்கு நீண்ட காலமாகவே விமர்சனங்கள் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணப் போட்டியை இலக்காகக் கொள்வதற்கு முன்பு, உள்நாட்டில் கால்பந்து அரங்குகளின் தரம் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என உள்ளூர் இரசிகர்கள் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளனர்.
ஆக உலகை வரவேற்க மலேசியா தனது கட்டமைப்புகளை வலுப்படுத்துமா அல்லது இது ஒரு நீண்டகாலக் கனவாகவே தங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்…



