
கோலாலம்பூர், ஆக 7 -ஷாப்பிங், சுற்றுலா, உலகத் தரம் வாய்ந்த கட்டிடங்கள் என பெருமை பேசப்படும் கோலாலம்பூர், இப்போது வேறொரு காரணத்திற்காக உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
பொது கழிப்பறைகள் மிகக் குறைவாக உள்ள நகரங்களில் ஒன்றாக கோலாலம்பூர் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச ஆய்வின்படி, கோலாலம்பூரில் ஒரு லட்சம் மக்களுக்கு வெறும் 2.5 பொது கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. இது ஹனோய் (2.6) மற்றும் பாங்காக் (3.5) நகரங்களைவிடவும் குறைவாகும்.
அதேவேளையில், சூரிச் நகரில் ஒரு லட்சம் மக்களுக்கு 76.5 பொது கழிப்பறைகள் உள்ளன. அதாவது, கோலாலம்பூரைவிட 30 மடங்குக்கும் அதிகம்.
இதன் விளைவாக, சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல், குழந்தைகளுடன் பயணிப்போர், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அன்றாட அவசர தேவைக்குக் கூட கழிப்பறையைத் தேடி அலைவதாக ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
“உலகத் தர நகரம் என்று பெருமை பேசும் கோலாலம்பூரில், அவசர நேரத்தில் ஒரு பொது கழிப்பறையைக் கூட எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லையா?” என்ற கேள்வியை இந்த ஆய்வு மீண்டும் எழுப்பியுள்ளது.



