கோலாலம்பூர், ஆகஸ்ட்-17, அம்பாங், தாமான் ச்செம்பாக்காவில் (Taman Cempaka) பிரபல மலாய் நடிகை ஒருவரது வீட்டில் 30,000 ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போனது தொடர்பில், அவரின் தனிப்பட்ட உதவியாளரே சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளார்.
அப்பெண் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, அம்பாங் ஜெயா போலீஸ் துணைத் தலைவர் நஸ்ரூல் எக்ராம் அபு சாரே (Nazruel Ekram Abu Saare) தெரிவித்தார்.
ஜூன் 26-ல் வீட்டிலிருந்த போது தனது இரு நெக்லஸ் சங்கிலிகள் காணாமல் போனதை புகார்தாரரான நடிகை உணர்ந்தார்.
தனது உதவியாளரிடம் அது குறித்து நடிகை கேட்ட போது அப்பெண் தனக்கு எதுவும் தெரியாது என மழுப்பியுள்ளார்.
மேலும் நடிகையின் மகளுக்குச் சொந்தமான 2 தங்க கைச் சங்கிலிகளும் ஒரு நெக்லஸும் கைப்பையிலிருந்து காணாமல் போயுள்ளன.
அவற்றை கண்டிப்பாக தனது உதவியாளர் தான் திருடியிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் நடிகை புகார் செய்ததால் அக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே மார்ச் வாக்கில் 10,000 ரிங்கிட் ரொக்கம் காணாமல் போனதும் அவரின் அச்சந்தேகத்தை வலுவூட்டியுள்ளது.
வயது குறிப்பிடப்படாத அந்த சந்தேக நபருக்கு ஏற்கனவே ஒரு குற்றப்பதிவு இருப்பதும் போலீசின் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.