
கோலாலம்பூர், ஏப் 20- குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய ஆடவன் ஒருவனால் ஏற்பட்ட விபத்தில் தனது கணவரை இழந்த நோர் நடியா அப்துல் மஜித்
( Nor Nadia Abdul Majid ) குற்றம் செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் தனது குடும்பத்தின் நலனுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். சட்டரீதியாக, இந்த வழக்கில் அரசுத் தரப்பின் நிலைப்பாடு குறித்து தனக்குக் கவலை இருப்பதாக அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய ஆர். சக்திகணபதி என்பவர் மீது தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றத்தில் தண்டனை நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்கப்படும். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் போகலாம் என்று நோர் நடியா அஞ்சுகிறார். மேலும் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் குறைந்தபட்ச குற்றச்சாட்டை தாம் ஏற்கப் போவதில்லை என்றும் சட்டரீதியான செயல்முறைக்கு பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டாலும்,
1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி ஒரு உரிமையியல் வழக்கை தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளதாக அவர் கூறினார்.
சிலாங்கூர் கிள்ளானில் மார்ச் 29 ஆம்தேதியன்று , மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் ஒருவரால் ஓட்டப்பட்ட கார், தனது கணவரான 33 வயது அமிருல் ஹபிஸ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை மோதியதால் அவர் உயிரிழந்தார். அவரது மரணத்தினால் தாமும் , தந்தையின் மரணத்தை இன்னும் புரிந்துகொள்ளப் போராடும் 7 வயதான முஹம்மது அலிப் இஸ் ரெய்கல்
( Muhammad Aliff Izz Rayqal) உட்பட தனது மூன்று குழந்தைகளும் பெரும் துயரில் மூழ்கியிருப்பதாக நோர் நாடியா தெரிவித்தார். அந்தச் சம்பவம் தங்கள் குடும்ப வாழ்க்கையைச் சீர்குலைத்துவிட்டதாகவும், அதனால் அவர்கள் பேராக் மாநிலம், லாரூட், பத்து குராவில் உள்ள கம்போங் ரெபோவில் இருக்கும் தன் மாமியார் வீட்டிற்குக் குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் நோர் நாடியா விவரித்தார்.



