Latestமலேசியா

கம்பார் மருத்துவமனைக்குள் மழைநீர் கசிவு; நோயாளிகளுக்கு குடை பிடித்த செவிலியர்கள்

கம்பார், மே-24 – கனமழை மற்றும் பலத்த காற்றால் கம்பார் மருத்துவமனையின் கூரை சேதமடைந்ததைத் தொடர்ந்து, வார்டுகளுக்குள் மழைநீர் கசிந்ததால் நோயாளிகளை பாதுகாக்க செவிலியர்கள் குடை பிடித்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் பகிர்ந்த தகவலின்படி, மின்தடை பலமுறை ஏற்பட்டதுடன், வென்டிலேட்டர் உள்ளிட்ட சில மருத்துவ உபகரணங்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கம்பார் மருத்துவமனை பார்வையாளர் வாரியத் தலைவர் அஹ்மட் ஃபௌஸி சுலைமான் (Ahmad Fauzi Sulaiman ) கூறுகையில், 1950-களில் கட்டப்பட்ட பழைய மருத்துவமனையின் கூரையின் சில பகுதிகள் பலத்த காற்றில் பறந்ததால், மழைநீர் சிகிச்சை அறைகள் மற்றும் வார்டுகளுக்குள் புகுந்ததாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தையடுத்து, சில நோயாளிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர். மேலும், ஒரு கணினி மற்றும் இரண்டு அச்சுப்பொறிகளும் நீர் புகுந்து சேதமடைந்தன.

இதற்கிடையில், மழைநீர் கசிந்த நிலையிலும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நோயாளிக்கு குடை பிடித்து பாதுகாத்த செவிலியரின் செயல், மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்துவதாக பலர் பாராட்டி வருகின்றனர்.

மருத்துவமனையின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கோரிக்கை சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!