Latestமலேசியா

கம்போடியா, அங்கோர் வாட் கோயிலை விட பழமையான புத்தர் சிலை கெடா, புக்கிட் சோராசில் கண்டுபிடிப்பு

ஜியோர்ஜ்டவுன், ஜூலை-3 – கெடா, யானில் உள்ள புக்கிட் சோராஸ் அகழ்வாராய்ச்சித் தளத்தில் எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆளுயர புத்தர் சிலை அண்மையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது வரலாற்று ஆர்வலர்களின் கவனத்தை திருப்பியுள்ளது.

மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தின் (USM) உலகத் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தைச் (PPAG) சேர்ந்த குழுவினர் அதனைக் கண்டெடுத்துள்ளனர்.

புக்கிட் சோராசில் முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட பெரிய புத்தர் கோவிலின் சுவரில் சுண்ணாம்பு, தண்ணீர், மணல் ஆகியவற்றின் கலவையான stucco-வைக் கொண்டு அச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலிரண்டு கட்ட அகழ்வுப் பணிகளில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்களுடன் ஒப்பிடுகையில் இப்புதியக் கண்டெடுப்பு, இன்னும் சிதைவடையாமல், தனது முழு அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அதாவது, முழுமையான தலையுடன், iconographic அடையாளங்களான மேலங்கி, முகபாவனை, மற்றும் ஆடைகள் சிலையில் தெளிவாகத் தெரிகின்றன.

தியான நிலையில் உள்ள புத்தர் சிலையோடு, இம்முறை பழங்கால எழுத்துகளைக் கொண்ட கல்வெட்டும், மண்பாண்டத் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.

ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக அச்சிலை புக்கிட் சோராசில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, தற்காலிகமாக USM பல்கலைக்கழக PPAG ஆய்வுக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இத்தொல்லியல் கண்டுபிடிப்பின் வழி, பண்டைய நாகரீகத்தில் புக்கிட் சோராஸ் மிக முக்கிய சமயத் தளமாக இருந்திருப்பதுடன், கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் (Angkor Wat), இந்தோனீசியாவில் உள்ள போரோபுதூர் (Borobudur) ஆகிய இடங்களை விட பழமையானது என நம்பப்படுவதாக சுற்றுலா கலை பண்பாடு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ரொஸ்லான் அப்துல் ரஹ்மான் (Datuk Roslan Abdul Rahman) கூறினார்.

அப்புத்தர் சிலை, பின்னர், தேர்தெடுக்கப்பட்ட பொருட்காட்சிசாலைகளில் காட்சிக்கு வைக்கப்படுமா அல்லது கம்போடியா, இந்தோனீசியா நாடுகளில் இருப்பது போல் தொல்பொருள் சுற்றுலா இடமாக புக்கிட் சோராசை மேம்படுத்துவதா என இன்னும் முடிவுச் செய்யப்படவில்லை என்றார் அவர்.

பண்டைய காலம் தொட்டே இந்தியர்கள் இந்நாட்டுக்கு வந்திருப்பதைச் பறைசாற்றும் இக்கண்டுபிடிப்புகள், வெறும் காட்சிப்பொருளாக வைக்கப்படாமல் வரலாற்று பொக்கிஷமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

அதை விட முக்கியம், வரலாறு தரவுகள் வெளிப்படைத்தன்மையோடு உள்ளது உள்ளபடியே பதிவுச் செய்யப்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!