காஜாங், ஜூலை 31 – தலைநகர், செராஸ், பத்து செம்பிலான் (9) அருகே, ஆபத்தான முறையில் காரை செலுத்தி இதர சில வாகனங்களை மோதித் தள்ளியதோடு, பெண் ஒருவரை அடித்ததாக நம்பப்படும் இரு உள்நாட்டு ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை, மாலை மணி நான்கு வாக்கில், காஜாங் சுற்று வட்டாரப் பகுதியில், அவ்விருவரும் கைதுச் செய்யப்பட்டதை, மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் நஸ்ரோன் அப்துல் யூசோப் உறுதிப்படுத்தினார்.
25 மற்றும் 26 வயதான அவ்விருவருக்கும் எதிராக, முறையே 12 மற்றும் 22 பழைய குற்றப்பதிவுகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
விசாரணைக்கு உதவும் பொருட்டு, அவர்கள் ஆறு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கும் அச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்றையும் போலீஸ் அடையாளம் கண்டிருப்பதாக நஸ்ரோன் சொன்னார்.
முன்னதாக, ஜூலை 28-ஆம் தேதி, மாலை மணி 6.30 வாக்கில், வெள்ளை நிற ஹோண்டா சிட்டி காரை ஆபத்தான முறையில் செலுத்தி இதர வாகனங்களை மோதித் தள்ளியதோடு, 29 வயதான பெண் ஒருவரை ஹெல்மெட்டால் அடித்த பின் தப்பியோடி விட்ட ஆடவன் ஒருவன் குறித்து, போலீஸ் இரு புகார்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.