ஜகார்த்தா , ஜூன் 13 – இந்தோனேசியாவில் தென் Sulawesi மாநிலத்தில் Kalempang கிராமத்தில் இந்தோனேசிய பெண் ஒருவர் காணாமல்போன மூன்று நாட்களுக்குப் பின் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இறந்த நிலையில் அவரது உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. 5 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு 45 வயதுடைய பரிடா ( Farida ) என்ற பெண்ணை விழுங்கியதை அவரது கணவரும் Kalempang கிராம மக்களும் கண்டுப்பிடித்தனர். நான்கு பிள்ளைகளுக்கு தாயான பரிடா வியாழக்கிழமை இரவு காணாமல்போனதாகவும் வீட்டிற்கு திரும்பாததால் அவரை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கிராமத் தலைவர் சுவார்டி ரோசி ( Suardi Rosi) AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பரிடாவிற்கு சொந்தமான பொருட்களை அவரது கணவர் கண்டுப்பிடித்த பகுதியில் அவரும் கிராம மக்களும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வயிறு உப்பிய நிலையில் மலைப்பாம்பு ஒன்றை கண்டனர். அந்த மலைப்பாம்பை பிடித்து அதன் வயிற்றை கிழிக்க அவர்கள் முடிவு செய்தனர். அவ்வாறு செய்தவுடன் உடனடியாக பரிடாவின் தலை தெரிந்தது. அந்த மலைப்பாம்பின் வயிற்றுக்குள் முழு உடையுடன் பரிடாவின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் அபூர்வமாக நடக்கக்கூடியது என்றாலும் அண்மையக் காலமாக சில மனிதர்களை மலைபாம்புகள் விழுங்கிய சம்பவங்கள் இந்தோனேசியாவில் நடந்துள்ளன.