Latestமலேசியா

கிரிப்டோ முதலீட்டு மோசடி ; RM217,000 பணத்தை பறிகொடுத்த ஜோகூர் ஆடவர்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 21 – கிரிப்டோ முதலீட்டின் வாயிலாக அதிக இலாபம் ஈட்ட முடியும் என்ற ஆசை தூண்டிலை நம்பி, ஆடவர் ஒருவர், தனது இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பணத்தை பறிகொடுத்துள்ளார்.

குறைந்தபட்சம் 500 ரிங்கிட்டை முதலீடு செய்தால், அந்த மூலப் பணத்திலிருந்து 20 விழுக்காடு இலாபமாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை நம்பி, அந்த 54 வயது ஆடவர் ஏமாந்ததாக, பத்து பஹாட் போலீஸ் துணைத் தலைவர் ஷாருலானுவார் முஷாடாட் அப்துல்லா சானி (Shahrulanuar Mushaddat Abdullah Sani) தெரிவித்தார்.

முதலில் பத்தாயிரத்து 500 ரிங்கிட்டை இரு வேறு வங்கி கணக்குகளில் செலுத்திய அவ்வாடவருக்கு, அதன் வாயிலாக 12 ஆயிரத்து 222 ரிங்கிட் 82 சென் இலாபம் கிடைத்துள்ளது.

அதனை தொடர்ந்து, மேலும் அதிகமான இலாபத்தை ஈட்ட, வாட்ஸ்அப் வாயிலாக தொடர்பு கொண்ட நபரின் உத்தரவுபடி, இம்மாதம் எட்டாம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை, மூன்று வெவ்வேறு வங்கி கணக்குகளில், அவ்வாடவர் இரண்டு லட்சத்து 17 ஆயிரம் ரிங்கிட் பணத்தை செலுத்தியுள்ளார்.

எனினும், அதற்கான இலாபத்தை அவர் மீட்க முற்பட்ட போது, அவரது கிரிப்டோ கணக்கு முடக்கப்பட்டு விட்டதாகவும், அதனை விடுவிக்க வேண்டுமானால், மேலும் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் ரிங்கிட்டை செலுத்த வேண்டும் எனவும், அந்நபர் பணித்ததை தொடர்ந்து, சந்தேகம் எழுந்ததால் பாதிக்கப்பட்டவர் போலீஸ் புகார் செய்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தின், 420-வது பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!