கோத்தா பாரு, ஏப்ரல் 3 – கிளந்தான், குவாலா கெராய், லெமாங் மானிக் உராய் சதுக்கத்திலுள்ள, பொது கழிவறைக்கு முன்புறம், ஆடவன் ஒருவன் வயிற்றில் கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டான்.
நேற்று மாலை மணி 6.30 வாக்கில், ஆடவன் ஒருவன் சுயநினைவு இன்றி கிடப்பதை கண்டு பொதுமக்கள் சிலர் போலீசுக்கு தகவல் வழங்கியதாக, கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் ஜாக்கி ஹருன் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவ்வாடவன் உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தியதோடு, வயிற்றில் காணப்பட்ட மூன்று கத்தி குத்து காயங்களால் அவன் உயிரிழந்ததையும் கண்டுபிடித்தனர்.
அதனை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மார்ச் 28-ஆம் தேதி, உடலுறவில் ஈடுபட்டிருந்த போது, அவ்வாடவனை சமையல் கத்தியால் குத்திய அவனது 28 வயது காதலியை போலீசார் கைதுச் செய்தனர்.
அப்பெண்ணிடமிருந்து கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
கத்தியால் குத்தப்பட்டவுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பி வந்த அந்த 45 வயது ஆடவன், காயத்திற்கு சிகிச்சை பெறாததால், வயிறு மற்றும் மலப்பையில் கிருமி தொற்று ஏற்பட்டு அவன் உயிரிழந்தது சவப் பரிசோதனை வாயிலாக தெரிய வந்துள்ளது.
அவ்வாடவனுக்கு எதிராக, ஆட்கடத்தல், போதைப் பொருள் உட்பட பழைய குற்றப்பதிவுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.