கிள்ளான், ஜூன் 7 – நாட்டிலேயே அதிகமான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக கருதப்படும் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கடந்த ஆறு மாத காலமாக கணினி வகுப்பு நடத்தப்படாததால் அப்பள்ளியைச் சேர்ந்த 1,500 மாணர்கள் ஏமாற்றம் அடைந்ததுள்ளதோடு அவர்களது பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுவரை இப்பள்ளியில் பாட நேரத்திலேயே முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு கணினி பாடம் போதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி பாட நேரத்திலேயே கணினி வகுப்பு நடத்தக்கூடாது என கிள்ளான் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் சிலாங்கூர் கல்வித்துறையின் உத்தரவினால் இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கணினி வகுப்பு நடத்தப்பட முடியாமல் உள்ளது. இதனால் பல அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நன்கொடையாளர்கள் இப்பள்ளிக்கு வாங்கிக் கொடுத்த சுமார் 150 கணினிகள் பயன்படுத்த முடியாமல் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன.
பள்ளி நேரத்திலேயே கணினி வகுப்பு நடத்தப்பட்டு வந்ததால் இப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்புவரை பயின்று வந்த அனைத்து மாணவர்களும் கணினி கையாளும் அடிப்படை பயிற்சி முதல் ஒரு இணையப் பக்கத்தை தயாரிக்கும்வரை ஆற்றலை பெற்று வந்தனர்.
அதோடு மட்டுமின்றி அப்பள்ளி மாணவர்கள் கணினி தொடர்பான பல்வேறு போட்டிகளிலும் சிறந்த வெற்றிகளை குவித்து வந்தனர். இப்போதைய புதிய உத்தரவினால் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பி40 மாணவர்களும் கணினி பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துளளனர்.
தகவல் தொழிற்நுட்பம் முதல் செயற்கை நுண்ணறிவு உட்பட கணினி துறையில் பல்வேறு நிபுணத்துவத்தை நமது மாணவர்கள் பெற வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் ஊக்குவித்து வரும் இவ்வேளையில் கிள்ளான் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் சிலங்கூர் கல்வித்துறையின் உத்தரவினால் சிம்பாங் லீமா மாணவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளாக அப்பள்ளியின் கணினி நடவடிக்கை குழுவிற்கான தலைவர் நாகராஜா சின்னையா வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்திருக்கிறார்.
பாட நேரத்திலேயே கணினி வகுப்பு நடத்த வேண்டும் என பெற்றோர்கள் விரும்புவதோடு கடந்த 20 ஆண்டு காலமாக எந்தவொரு பிரச்சனையும் இன்றி சுமுகமாக நடைபெற்ற அந்த அணுகுமுறையை மனிதாபிமானத்தோடு தொடர்வதற்கு கிள்ளான் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் சிலாங்கூர் கல்வித் துறை விரைந்து அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பாட அட்டவணை நேரத்திலேயே கணினி வகுப்பு நடத்துவதால் மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவு பிரச்சனையும் எதிர்நோக்கமாட்டார்கள். பெற்றோர்களும் , பள்ளி மேலாளர் வாரியமும் கணினி வகுப்பு செயல்படுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிவருவதால் தங்களது கோரிக்கைக்கு கல்வி அதிகாரிகள் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என பள்ளி வாரிய குழுவின் உறுப்பினருமான நாகாராஜா சின்னையா கேட்டுக்கொண்டார்.