
பெந்தோங், ஜூன்-10-கெந்திங் மலைப் பாதைகளில், குறிப்பாக கீழ்நோக்கிச் செல்லும் சாலைகளில், பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துமாறு சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் அதன் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மே 30-ஆம் தேதி இரு சுற்றுலாப் பேருந்துகள் மற்றும் ஒரு கார் மோதி, 7 நேப்பாள நாட்டினர் காயமடைந்த விபத்து குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில், பேருந்தின் பிரேக் பழுதானதே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநருக்கு முறையான தொழிற்பயிற்சி ஓட்டுநர் உரிமம் (PSV) இல்லை என்றும், அவர் மீது ஏற்கனவே 35 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த சாலைப் போக்குவரத்து இலாகா முன்பே பரிந்துரைத்திருந்தும், அது தனியார் சாலை என்பதால் இன்னும் அனுமதி கிடைக்காமல் தாமதமாகி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பொது மக்களின் உயிரைப் பாதுகாக்க, அதிநவீன தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் வேகத்தடைகளை அமைக்க கெந்திங் நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.



