திருவனந்தபுரம், ஜூலை-30, தென்னிந்திய மாநிலம் கேரளாவின் வயநாட்டில் (Wayanad) தொடர் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிறார் உள்ளிட்ட குறைந்தது 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை மூன்று நிலச்சரிவுகள் நடந்திருப்பதாகவும், அவற்றில் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கின்றன.
அதோடு முக்கியப் பாலமொன்றும் இடிந்து விழுந்ததால், காணாமல் போனவர்களைத் தேடி மீட்குப் பணிகள் (SAR) சிரமத்தை எதிர்நோக்கியுள்ளன.
இதையடுத்து இராணுவத்தினர் பெரும் சிரமப்பட்டு தற்காலிக பாலமொன்றை அமைத்து, மீட்புப் பணிகளுக்கு உதவி வருகின்றனர்.
மீட்புப் பணிகளுக்கு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், விமானப்படையும் அதில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
எனினும், சம்பவ இடத்தில் இணையச் சேவை இல்லாதது, SAR பணிகளுக்குப் பெரும் சவாலாக விளங்குவதாகக் கூறப்படுகிறது.
தொலைக்காட்சிகளில் வெளியான காட்சிகளில் வெள்ள நீர் கரைபுரண்டோடுவதும், மரங்கள் சாய்ந்து விழுவதும், ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்படுவதும் தெரிகிறது.
இன்றும் அங்கு கனமழைப் பெய்யுமென வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.