
கங்கார், மார்ச்-29- இந்துக்களை இழிவுப்படுத்திய புகாரின் பேரில் கைதாகி 2 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்ட சம்ரி வினோத் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் போலீஸிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் விசாரணைக்காகத் தடுத்து வைக்க நீதிமன்றம் ஆணைப் பிறப்பித்த 24 மணி நேரங்களில் அவர் விடுவிக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கைதான நாளிலிருந்து கணக்கிட்டால் அந்த 2 நாட்கள் நிறைவடைந்து விட்டதாக தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அருண் துரைசாமி கூறியுள்ளார்.
அதே சமயத்தில்”பொது மக்களிடமிருந்து கிடைத்த வழக்கத்திற்கு மாறான அழுத்தம் காரணமாகவே” சம்ரி வினோத் விடுவிக்கப்பட்டதாக, பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த Chegubard எனப்படும் Badrul Hisham Shaharin தனது facebook பதிவில் கூறியுள்ளார்.
நேற்று காலையில் தான் நீதிமன்ற ஆணையே கிடைத்தது; ஆனால் வெள்ளிக்கிழமைத் தொழுகைக்கு முன்பே விடுவிக்கப்பட்டு, அனைவருக்கும் ஹரி ராயா வாழ்த்து கூறி அவர் வீடு திரும்பும் காணொளி ஒன்றும் முகநூலில் வெளியாகியுள்ளது.
தனக்கெதிராக போலீஸார் தடுப்புக் காவல் உத்தரவுக்கு விண்ணப்பித்த போது, நீதிமன்றத்தில் 9 வழக்கறிஞர்கள் தனக்காக இலவசமாக வாதாட முன்வந்ததாக அப்பதிவில் சம்ரி பெருமையுடன் குறிப்பிட்டார்.
கைதான போது அவரின் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டிருந்தது இங்குக் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரத்தில் மூக்கை நுழைத்த சம்ரி வினோத், தனது facebook பதிவில் இந்துக்களைக் கொச்சைப்படுத்தியிருந்ததாக புகார் எழுந்தது.
ஊரார் நிலத்தில் சட்டவிரோதமாக கோயில் கட்டுவதும் பிறகு நில உரிமையாளரிடமே பிரச்னை செய்வதும் இங்குள்ள இந்துக்களுக்கு வாடிக்கையாகி விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது நிந்தனைக்குரியச் செயல் எனக் கூறி போலீஸில் புகார் செய்யப்பட்டதை அடுத்து வியாழக்கிழமை மாலை அவர் பெர்லிஸில் கைதானார்.