புது டெல்லி, ஆகஸ்ட் -21, இந்தியா முழுவதும் பணியிடங்களில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் சிறப்புப் பணிக்குழுவொன்றை அமைத்துள்ளது.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் அந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
மருத்துவமனையில் மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்பது ஓர் அடிப்படை பிரச்னையாகும்.
அது தொடருவதை இனியும் அனுமதிக்க முடியாது.
எனவே, மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்,
மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பை உறுதிச் செய்தல், மருத்துவர்களுக்கான தனி கழிவறைகள், CCTV கேமராக்கள், இரவு போக்குவரத்து வசதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த பணிக்குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வழங்குமென தலைமை நீதிபதி அறிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் மறுநாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவர் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானதால், இந்தியா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலராக பணியாற்றிய ஆடவர் கைது செய்யப்பட்டார்.
எனினும் பயிற்சி மருத்துவரின் மரணத்தில் மருத்துவமனை தரப்பு உண்மைகளை மூடி மறைக்க முயலுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அச்சம்பவத்தை இந்திய உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.