Latestமலேசியா

கோம்பாக்கில், நச்சுணவால் இருவர் பலி, 93 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் ; சால்மோனெல்லா பாக்டீரியா தான் காரணம் என்பது உறுதி

கோலாலம்பூர், ஜூன் 13 – சிலாங்கூர், கோம்பாக்கில், பள்ளி நிகழ்ச்சியின் போது, பிஹுன் மற்றும் பொரித்த முட்டைகளை உட்கொண்டதால் பாதிக்கப்பட்டவர்களின் மல மாதிரிகளில், சால்மோனெல்லா (Salmonella) பாக்டீரியாவை, சுகாதார அமைச்சு கண்டுபிடித்துள்ளது.

சால்மோனெல்லா என்பது வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்றுப்பிடிப்பு போன்ற உபாதைகளை ஏற்படுத்தும் ஒருவகை பாக்டீரியா ஆகும். அதனால், சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம்.

சுங்கை பூலோவிலுள்ள, தேசிய பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் சில மல மாதிரிகளின் முடிவுகள், இன்னமும் நிலுவையில் இருப்பதாக, சிலாங்கூர் மாநில சுகாதார துறை கூறியுள்ளது.

அதே சமயம், உணவு மாதிரி, தொடர்புடைய மேற்பரப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட நீர் குமிழிகள், உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் உணவை கையாள்பவர்களிடமிருந்து சேகரிக்க மாதிரி முடிவுகளும் இன்னும் நிலுவையில் உள்ளன.

அந்த நச்சுணவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 பேர் அதிகரித்து, 82 பேரிலிருந்து 93 பேராக உயர்ந்துள்ளது.

நேற்று காலை மணி பத்து நிலவரப்படி, ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளை ; அதில் மூவர் தீவிரக் கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோம்பாக்கில் சமய பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பரிமாறப்பட்ட மாசடைந்த உணவை உட்கொண்ட 17 வயது பதின்ம வயது இளைஞனும், இரண்டு வயது சிறுமியும் உயிரிழந்தனர்.

எனினும், உணவு விநியோகிப்பாளர் டைபாய்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதால், உணவு மாசடைந்ததற்கான தெளிவான ஆதாரம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதே சமயம், சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட முட்டை உட்பட அனைத்து உணவும் நன்கு சுத்தம் செய்யப்பட்ட பின்னரே சமைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

அந்த முட்டைகள், நச்சுணவு சம்பவத்திற்கு முதல் நாள், ஜூன் ஏழாம் தேதி தான் வாங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!