கோலாலம்பூர், ஆகஸ்ட்-9, Pickup லாரியில் பூனையை தொங்க விட்டு சாலையில் படும்படியாக அதனை தர தரவென இழுத்துச் சென்ற சம்பவம் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனைக் கடுமையாகக் கண்டித்த மலேசிய விலங்குகள் நலச் சங்கம், அது குறித்த விசாரணையை கால்நடை சேவைத் துறை (DVS) தொடர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளது.
விலங்குகளும் ஜீவராசிகளே; அவற்றுக்கும் நீதி வேண்டுமென அச்சங்கத்தின் தலைவர் ஆரி டுவி ஆண்டிகா (Arie Dwi Andika) வலியுறுத்தினார்.
தங்கள் பராமரிப்பில் உள்ள பிராணிகளைப் பொறுப்போடும் மனிதாபிமானத்துடனும் நடத்தாவிடில் என்ன நடக்குமென்பதை, உரிமையாளர்களுக்கு ஒரு பாடமாக உணர்த்த, அச்சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.
வழக்கம் போல், இதிலும் தெரியாமல் செய்து விட்டோம் என்பது போன்ற சாக்குபோக்கு சொல்லி தப்பித்துக்கொள்ள முயற்சிக்கலாம்.
ஆனால் அது நடக்கக்கூடாது.
பிராணிகள் மற்றும் விலங்குகள் பராமரிப்பில் நிகழும் கவனக்குறைவுகளுக்கானத் தண்டனை 2015 விலங்குகள் நலச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அச்சம்பவத்தில் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்ட உரிமையாளர் கண்டிப்பாக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென ஆண்டிகா வலியுறுத்தினார்.
பினாங்கு, சிம்பாங் அம்பாட்டில் ஒடிக் கொண்டிருக்கும் நான்கு சக்கர வாகனத்தின் பின்னால் பூனை கயிற்றில் கட்டி தொங்க விடப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதைக் காட்டும் புகைப்படம் முன்னதாக வைரலாகி கடும் கண்டனத்தைப் பெற்றது.
எனினும் தாம் பூனையை அப்படி சித்ரவதை ஏதும் செய்யவில்லை, அது தெரியாமல் நடந்த ஒன்று என அதன் உரிமையாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.