
சுங்கைப் பட்டாணி, மே 15 – சுங்கைப் பட்டாணியில், கோலா மூடா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு முன்பாக, சண்டையில் பங்கேற்ற 10 மாணவிகளை போலீசார் அடையாளம் கண்டனர்.
தகராறில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகியதை போலீஸ் கண்டறிந்ததாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் (Hanyan Ramlan) கூறினார்.
பல மாணவிகள் சம்பந்தப்பட்ட இந்தச் சண்டை கடந்த புதன்கிழமை மதியம் 1 மணி முதல் 2 மணி வரை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஒரு தவறான புரிதலால் இந்தச் சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் Bedong போலீஸ் தலைவர் நேற்று மாலை மணி 5.30 அளவில் புகார் செய்தார். பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களுக்கு போலீஸ்துறை எப்போதும் தீவிர கவனம் செலுத்துகிறது.
இந்தச் சம்பவத்தில் குண்டர் கும்பல் தொடர்பான கூறுகள் எதுவும் இல்லை என்றும், மாறாக ஒரே பள்ளியைச் சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மட்டுமே இதற்குக் காரணம் என்று தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உண்மையில் இரண்டு அல்லது மூன்று மாணவிகள் மட்டுமே சண்டையிட்டதாக நம்பப்படுவதாகவும், மற்றவர்கள் பிரச்னையை விலக்க முயன்றதால், காணொளியில் நிலைமை மிகவும் தீவிரமாகத் தோன்றியதாக ஹன்யான் ரம்லான் கூறினார்.



