பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24 – சபா சுற்றுலாத் துறையை மேம்படுத்த, தமதமைச்சு நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என கூறப்படுவதை, சுற்றுலா கலை பண்பாட்டு அமைச்சர் தியோங் கிங் சிங் (Tiong King Sing) மறுத்துள்ளார்.
அந்த குற்றச்சாட்டு, தமது அதிகாரிகளின் முயற்சிகளை சிறுமைப்படுத்தும் மற்றும் குறைத்து மதிப்பிடும் செயல் என தியோங் சாடியுள்ளார்.
சபாவின், போட்டி ஆற்றல், வசதிகள் மற்றும் சுற்றுலா பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு தமது அமைச்சு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சபாவை இணைக்கும் வாடகை விமானச் சேவைகளை அறிமுகப்படுத்துவதும் அதில் அடங்குமென, தனது முகநூல் பதிவு வாயிலாக தியோங் கூறியுள்ளார்.
கடந்தாண்டு ஆகஸ்ட்டு முதல் இவ்வாண்டு மே வரையில், சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர் (Hajiji Noor) உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன், அதற்கான பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.
குறிப்பாக, சபா சுற்றுலாத் துறையை மேம்படுத்த முன்னோடி திட்டம் ஒன்றை தயார் செய்யுமாறு மாநில அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்ட போதும், இதுவரை அந்த திட்ட வரைவின் ஒரு பக்கத்தை கூட தாம் பார்க்கவில்லை என தியோங் கேலியாக கூறியுள்ளார்.
அதனால், யார் சபா சுற்றுலா துறை மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை? என தியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, சபா சுற்றுலா அமைச்சு தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து, மத்திய அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கோரப்பட்டாலும், சுற்றுலா கலை பண்பாட்டு அமைச்சு அதனை புறக்கணித்ததாக, சபா பொருளாதார ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த ஜான் லோ (John Lo), கடந்த வாரம் டெய்லி எக்ஸ்பிரஸில் (Daily Express) வெளியிட்டிருந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
சபாவிற்கு கூடுதல் விமான சேவைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்கள் சபாவில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், புறக்கணிப்பு கொள்கையால் சபா மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் லோ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.