Latestமலேசியா

சரவாக் நங்கா எம்புவான் ஆரம்பப்பள்ளியில் முதன்முறையாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா; ஆசிரியர் பிரசாந்த் முயற்சி

சரவாக் நங்கா எம்புவான் ஆரம்பப்பள்ளியில் முதன்முறையாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா; ஆசிரியர் பிரசாந்த் முயற்சி

 

சரவாக், பிப்ரவரி 12 –

சரவாக் நங்கா எம்புவா தேசிய பள்ளியில் முதன்முறையாக தமிழரின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்திய சமூகத்தின் பண்பாடு, மரபுகள் மற்றும் திருவிழா சிறப்புகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், இந்நிகழ்ச்சி கடந்த மூன்று மாதங்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

சரவாக்கில் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில், பள்ளியின் புதிய மற்றும் ஒரே ஒரு இந்திய ஆசிரியரான பிரசாந்த் அவர்களின் முயற்சியால் இந்த விழா செயல்படுத்தப்பட்டது. இது மாணவர்களுக்கு மலேசியாவின் பல்லின பண்பாட்டின் வளத்தை அறிமுகப்படுத்திய ஒரு முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.

அப்பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்களும் மாணவர்களும் ஈபான் இனத்தைச் சார்ந்தவர்கள். அவர்களின் மத்தியில் நமது பொங்கல் விழாவின் மகத்துவத்தையும் அதன் உட்பொருளையும் வெளிக்கொணரும் நோக்கிலேயே இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது என்கின்றார் ஆசிரியர் பிரசாந்த்.

மேலும், ஆசிரியர்களும் மாணவர்களும் படகைப் பயன்படுத்தி பள்ளிக்கு வரும் சூழலில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து, தமிழ் பாடல்களுக்கு நடனம் புரிந்த மற்ற மாணவர்களின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த விழாவிற்கு ஆதரவளித்த ஆசிரியர்கள், மாநில YB, சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர்கள் முக்கியமாக அப்பகுதியிலிருக்கும் ஒரே ஒரு இந்திய குடும்பமான திருமதி விசாலாட்சி அவர்களுக்கும் ஆசிரியர் பிரசாந்த் தனது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்து கொண்டார்.

முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு கிடைத்த வரவேற்பு மிகுந்த உற்சாகத்தையும் பள்ளி சமூகத்தின் ஒற்றுமை உணர்வையும் வெளிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!