
கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 – மலேசியாவில் சாலை விபத்தில் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பும் நாட்டின் பொருளாதாரத்திற்கு குறைந்தது 3.12 மில்லியன் ரிங்கிட் இழப்பை ஏற்படுத்துவதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ட்சுல்கெஃப்லி அக்மாட் (Dr Dzulkefly Ahmad) தெரிவித்தார்.
அவரின் கூற்றுப்படி, நாட்டில் தினமும் சராசரியாக 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். இதில் 59 விழுக்காடு உயிரிழப்புகள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களைச் சேர்ந்தவை.
RXZ Members 8.0 நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ச்சியாக நிகழும் உயிரிழப்பு விபத்துகள் கவலைக்குரியவை எனக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தும் அமைப்பாளர்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை கட்டாய அம்சமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், “Yang Santai, Pasti Sampai” அதாவது அமைதியாகச் சென்றால் நிச்சயம் சென்றடைவோம் என்ற பாதுகாப்பு மனப்பான்மையை அனைவரும் கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்



