
குவாந்தான், செப்டம்பர்-19-பஹாங்கில் பாதுகாக்கப்பட்ட Tasik Bera நிரந்தர காட்டுப் பகுதியில், இரப்பர் மற்றும் செம்பனை எண்ணெய் போன்ற வணிகப் பயிர்களுக்காக 7,000 ஹெக்டருக்கும் அதிகமான நிலம் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 14 முதல் வனத்துறை, வனவிலங்குத் துறை, நில அலுவலகம் மற்றும் போலீஸ் இணைந்து மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளின் மூலம் இந்த மிகப்பெரிய நில ஆக்கிரமிப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக பஹாங் மாநில அமுலாக்கப் பிரிவுத் தலைவர் Saifullah Muhammad Ali தெரிவித்தார்.
வெளிமாநிலத்தைச் சேர்ந்த சட்டவிரோதக் கும்பல்கள், பூர்வக்குடி மக்களின் பாரம்பரிய நிலங்கள் என்ற பெயரில் அப்பாவிகளைத் தவறாகப் பயன்படுத்தி இந்த பரந்த நிலப்பரப்பை அழித்துள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே, Tasik Bera பாதுகாப்பு வனப்பகுதியில் அமுலாக்கப் பணிகள் நடைபெற்றபோது, அங்கு சில நபர்கள் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தடுப்புகளை ஏற்படுத்தி தகராறில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அரசு ஊழியர்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி 4 பெண்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
இது குறித்த மேல் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



