சிங்கப்பூர், மே 30 – சிங்கப்பூர், Choa Chu Kang நீர் சுத்திகரிப்பு ஆலையில் கடந்த வாரம் ஏற்பட்ட நச்சுவாயு கசிவை சுவாசித்ததால், மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 24 வயது மலேசிய துணை குத்தகை பணியாளர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து, அந்த நச்சுவாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை இரவு மணி பத்து வாக்கில் அவர் உயிரிழந்ததை, சிங்கப்பூர் தேசிய நீர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மோசமான காயம் காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த நச்சுவாயு கசிவில் பாதிக்கப்பட்ட, மற்றொரு 39 வயது மலேசியர், கடந்த செவ்வாய்கிழமை, தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவரது நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 23-ஆம் தேதி, Choa Chu Kang நீர் சுத்திகரிப்பு ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள், சுயநினைவு அற்ற நிலையில் மயங்கி கிடக்க காணப்பட்டனர்.
அவர்களில் ஒருவர், அதே நாள் மருத்துவமனையில் உயிரிழந்த வேளை ; இதர இருவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.