சிங்கப்பூர், ஏப்ரல்-2, சிங்கப்பூரில் சொந்த மகள், மகள் வயிற்றுப் பெண் பேரப்பிள்ளை, மற்றும் மைத்துனியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியக் குற்றத்திற்காக, 75 வயது முதியவருக்கு 21 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அம்மூவரும் சிறு பிள்ளையாக இருந்த 1975 முதல் 2021 வரைக்குமான காலக்கட்டத்தில், அம்முதியவர் அக்குற்றங்களைப் புரிந்திருக்கிறார்.
சிறுவயது முதலே அத்தொல்லையை அனுபவித்து வந்திருந்தாலும், அது தவறு என்றோ, அதை வெளியில் சொல்ல வேண்டும் என்றோ அவர்களுக்குத் தெரியவில்லை.
இது அந்நபருக்கு மிகவும் வசதியாகப் போக, மகள், மைத்துனி முடிந்து, பேரப் பிள்ளை வரை தன் கைவரிசையைக் காட்டியுள்ளார்.
2021-ஆம் ஆண்டு ஒரு தகராற்றின் போது கோபமடைந்து, அவரின் மகள் தனது கணவரிடம் உண்மையைச் சொல்ல, அந்நபரின் குட்டு உடைந்தது.
அவ்விருவரும், பிள்ளைகளிடம் அது குறித்து சொல்லி புரிய வைக்க எத்தணித்த சமயத்தில், தாத்தாவின் பாலியல் தொல்லைக்கு தானும் பலியாகியிருப்பதாக அவர்களின் பெண் பிள்ளைக் கூறி, அதிர்ச்சியில் உறைய வைத்தார்.
2021-ஆம் ஆண்டு அவர் கைதுச் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் திங்கட்கிழமையன்று அவர் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
முதிய வயதைக் கருத்தில் கொண்டு அவருக்கு பிரம்படி கொடுக்க முடியாத காரணத்தால், குறைந்தது 20 முதல் 23 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பிரம்படிக்கு பதிலாக கூடுதலாக 6 மாத சிறையும் வழங்கப்பட வேண்டும் என அரசு தரப்பு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.
அனைத்தையும் பரிசீலித்த நீதிபதி அம்முதியவருக்கு, மொத்தமாக 21 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அறிவித்து தீர்ப்பளித்தார்.