சிங்கப்பூர், ஏப்ரல் 4 – சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் உட்பட அங்கு செல்லும் மலேசியர்கள் அனைவரும், அந்நாட்டின் சட்டத் திட்டங்களில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
சிங்கப்பூர் அதிகாரிகளால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, அது அவசியம் என, அந்நாட்டிற்கான மலேசிய உயர் ஆணையர் டத்தோ டாக்டர் அஸ்பர் முஹமட் முஸ்தாபார் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் வேப் – மின்னியல் சிகிரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் வேப்பை வாங்கினாலோ, பயன்படுத்தினாலோ ஈராயிரம் டாலர் அல்லது ஏழாயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அந்நாட்டில், வேப்பை விற்பது, வைத்திருப்பது, இறக்குமதி செய்வது, விநியோகிப்பது உட்பட அதன் உபரிப் பாகங்களை கொண்டிருப்பதும் குற்றமாகும்.
அண்மைய சில காலமாக, சிங்கப்பூருக்கு செல்லும் மலேசியர்கள் பலர் அதனால், பாதிக்கப்படுவதாக அஸ்பர் சொன்னார்.
தடுத்து நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர்களின் கடப்பிதழ்களும் சில நேரங்களில் பறிமுதல் செய்யப்படுவதால், அங்கு வேலை செய்யும் மலேசியர்கள் அதனால் வேலை இழக்கும் சூழல் ஏற்படலாம் எனவும் அஸ்பர் எச்சரித்துள்ளார்.