Latestமலேசியா

சினிமா ரசிகர்களுக்கு ஜாக்பாட்; தமிழகத்தில் இனி ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி அனுமதி

சென்னை, மே-26-தமிழ் சினிமா உலகிற்குப் புத்துயிர் ஊட்டும் வகையில், மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் இனி நாளொன்றுக்கு 5 காட்சிகள் திரையிடத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அனுமதி வழங்கியுள்ளார்.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் நீண்ட நாட்களாக முன்வைத்து வந்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இந்த அதிரடி உத்திரவைப் பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம், இதுவரை நடைமுறையில் இருந்த 4 காட்சிகள் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, இனி தினமும் 5 காட்சிகள் திரையிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இம்முடிவு, நலிவடைந்து வரும் திரையரங்குத் தொழிலை மீட்டெடுக்கவும், வருவாயைப் பெருக்கவும் பெரிதும் உதவும் எனத் சினிமா துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

என்றாலும், அதிகாலை மற்றும் நள்ளிரவுக் காட்சிகளின் போது இரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு, சில முக்கிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், அரசாங்கம் நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இந்த 5 காட்சிகளும் திரையிடப்பட வேண்டும் எனத் திரையரங்கு நிர்வாகங்களுக்கு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

திரைத்துறையின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் அதே வேளை, பொது மக்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!