
சிரம்பான், மே-28-நெகிரி செம்பிலான், சிரம்பானில் சோப்பு நீர் இருந்த வாளிக்குள் தலைகீழாக விழுந்த 11 மாதக் பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, அக்குழந்தையின் 54 வயது பாட்டி போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் பாட்டி சமையல் மற்றும் துணி துவைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, தொட்டியில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை காணாமல் போயுள்ளது.
தேடிப் பார்த்தபோது, வீட்டின் பின்பக்கமிருந்த சோப்பு நீர் வாளிக்குள் குழந்தை தலைகீழாகக் கிடந்தது தெரியவந்தது.
உடனடியாக மீட்கப்பட்ட அக்குழந்தை அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சிரம்பான் Tuanku Jaafar மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
எனினும், மாலை 4.30 மணியளவில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
குழந்தையின் மரணம் தொடர்பாக, அலட்சியமாக இருந்ததாகக் கூறி, 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் பாட்டி கைதுச் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



