
பேங்கோக், மே-28-தாய்லாந்து, பேங்கோக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் 250-க்கும் மேற்பட்ட உயிருள்ள வனவிலங்குகளைப் பெட்டியில் அடைத்து இந்தியாவுக்குக் கடத்த முயன்ற 34 வயது மலேசிய ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, இந்தியாவின் கொல்கத்தா புறப்படவிருந்த விமானத்தில் ஏறுவதற்குச் சற்று முன்பாக, அவ்வாடவர் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்துச் சோதனையிடப்பட்டார்.
அவரது பயணப் பெட்டியைச் சோதித்தபோது, அதற்குள் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விலங்குகள் கண்டெடுக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட விலங்குகளில் 100 நீல-நாக்கு பல்லிகள் (blue-tongued skinks), 80 நன்னீர் ஆமைகள், 62 ஓனான்கள், 5 உடும்புகள் மற்றும் அரிய வகை பறவைகள் அடங்கும்.
கைதான அந்த மலேசியர் மீது வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுங்கச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் அனைத்துலகக் கடத்தல் கும்பலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களைத் தேடும் பணியில் தாய்லாந்து அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



