
கோலாலம்பூர், ஆகஸ்ட்-1-பொது சுகாதார முறையை வலுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சான KKM ஆண்டுக்கு 1.25 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் 13,343 புதிய பணியிடங்களை உருவாக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
நாடளாவிய அளவில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மற்றும் தரம் உயர்த்தப்பட்டுள்ள 256 சுகாதார மையங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த இப்பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
இதில் 1,197 மருத்துவ அதிகாரிகள், 3,471 தாதியர்கள், 1,972 உதவி மருத்துவ அதிகாரிகள், 339 மருந்தாளர்கள் மற்றும் 239 பல் மருத்துவ அதிகாரிகள் உட்பட 7,218 முதன்மை மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
எஞ்சிய 6,125 இடங்கள் இதர ஆதரவுப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள மேலவை உறுப்பினர் செனட்டர் Dr லிங்கேஸ்வரன் ஆர் அருணாச்சலம், இது சுகாதாரத் துறையில் பல காலமாக நிலவி வந்த ஆள் பற்றாக்குறைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மருத்துவராகவும் செனட்டராகவும் தாம் இதை உணர்வதாகவும், இதனால் முன்களப் பணியாளர்களின் பணிச்சுமை குறைவதோடு மக்களுக்குக் விரைவான சிகிச்சையும் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
பொது சுகாதாரத் துறையை மேம்படுத்தத் துணிச்சலான முடிவை எடுத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் ஆகியோருக்கும் லிங்கேஸ்வரன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.



