
புத்ராஜெயா, ஆகஸ்ட்-1-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர் மகாத்மா காந்தியின் பேரனும் வரலாற்று ஆசிரியருமான ராஜ்கோபால் காந்தியுடன் தொலைப்பேசியில் உரையாடியுள்ளார்.
நீண்டகால நண்பர்களான இருவரும், கடந்த 2012-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற ஆசிய ஜனநாயக உச்ச நிலை மாநாட்டில் சந்தித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், கல்வி மற்றும் சிந்தனைப் பரிமாற்றங்கள் மூலம் மலேசியா-இந்தியா இடையிலான வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வரும் 2027-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியாவுக்கு வருகை தருமாறு ராஜ்கோபால் காந்திக்கு அன்வார் சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த வருகையின் போது, கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களிடையே ஜனநாயகம், அமைதி மற்றும் நன்நெறி சார்ந்த தலைமைத்துவம் குறித்து அவர் உரையாற்றுவார்.
இந்த நீண்டகால நட்புறவு இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் அறிவுசார் பிணைப்பை மேலும் தீவிரமாக்கும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



