
திருவனந்தபுரம், ஆகஸ்ட்-2 – தென்னிந்திய மாநிலம் கேரளாவில் நடந்த அரிய வகை திருமணம், தற்போது இணையத் தளங்களிலும், மக்கள் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் தான் இந்த சுவாரஸ்யமான திருமணம் நடைபெற்றது.
ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதரர்களான அகில் மற்றும் நிகில்… அதேபோல ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதரிகளான மேகி மற்றும் மரியாவை மணமுடித்தனர்.
இதுமட்டுமா சுவாரஸ்யம்? மணமக்கள் இரட்டையர்கள் என்பது போதாதென்று, இந்தத் திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்களும் பென்டோ, பேஜோ என்ற இரட்டைச் சகோதரர்கள் தான்!
மேலும், அவர்களுக்கு உதவி செய்த சிறுவர்களும் இரட்டையர்கள் தான் என்பது தான் இதில் உச்சகட்ட ஆச்சரியம்.
சிறுவயதில் இருந்தே தங்கள் திருமணம் இரட்டையர்கள் சூழ நடைபெற வேண்டும் என்ற இவர்களது நீண்ட நாள் கனவாம்.
அது தற்போது நனவாகியுள்ளது.
ஒரே மேடையில் ஒரே வடிவில் நின்ற இவர்களைக் கண்டு, வந்திருந்த உறவினர்களும் ஊர் மக்களும் வியப்பில் மூழ்கினர்.
வாழ்க்கைப் பயணத்தை ஒன்றாகத் தொடங்கும் இந்த இரட்டையர் ஜோடிகளுக்கு, சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.



