ஈப்போ, ஏப்ரல் 1 – பேராக், தைப்பிங்கில், தனது தனிப்பட்ட மற்றும் வங்கித் தரவுகளை அறிந்த மோசடி நபரிடம், தொழிலதிபர் ஒருவர் நான்கு லட்சத்துக்கும் அதிகமான பணத்தை இழந்தார்.
அச்சம்பவம் குறித்து, கடந்த சனிக்கிழமை மாலை மணி 4.07 வாக்கில், சம்பந்தப்பட்ட தொழிலதிபரிடமிருந்து புகார் கிடைத்ததாக, பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி, காலை மணி 10.30 வாக்கில், தைப்பிங்கிலுள்ள, வங்கி ஒன்றில் இருந்த போது அந்த தொழிலதிபருக்கு, “இன்ஸ்பெக்டர் ஹசிசி” என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவனிடமிருந்து அழைப்பு கிடைத்துள்ளது.
பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அந்நபர், வாட்ஸ்அப் வாயிலாக தொழிலதிபருக்கு கைது ஆணை ஒன்றையும் அனுப்பியுள்ளான்.
அந்த குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க, தொழிலதிபரின் நிலையான வைப்புத் தொகையை சாதாரண வங்கி கணக்கிற்கு மாற்றுமாறும் அவன் பணித்துள்ளான்.
தமது நிலையான வைப்புத் தொகை குறித்து தாம் எதுவும் கூறாத போதும், அதனை தெரிந்து வைத்திருந்த அந்நபரை நம்பி, பிப்ரவரி 27 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரையில், ஆறு வெவ்வேறு பணமாற்று நடவடிக்கைகள் வாயிலாக, நான்கு லட்சத்து 18 ஆயிரத்து 200 ரிங்கிட்டை அந்த தொழிலதிபர் இழந்ததாக கூறப்படுகிறது.
எனினும், இறுதியில் அது ஒரு ஏமாற்று வேலை என அறிந்து கொண்ட அவர் கடந்த சனிக்கிழமை போலீஸ் புகார் செய்ததாக, ஹசான் பஸ்ரி சொன்னார்.
அச்சம்பவம் தொடர்பில், குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.