Latestமலேசியா

செயற்கை மழையை பொழிவிக்க நட்மா, மெட்மலேசியா திட்டம் ; இரு அணைக்கட்டுகளில் நீர் நிலையை நிலைப்படுத்தும் நடவடிக்கை

சுபாங் ஜெயா, பிப்ரவரி 28 – நட்மா எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனமும், மெட் மலேசியா எனும் தேசிய வானிலை ஆய்வு மையமும் இணைந்து செயற்கை மழையை பொழிவிக்க திட்டமிட்டுள்ளன.

தீபகற்ப மலேசியாவில், வடக்கில் உள்ள இரு அணைக்கட்டுகளில் நீர் மட்டத்தை நிலைப்படுத்த அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, பினாங்கு, ஆயிர் இத்தாம் அணைக்கட்டிலும், பேராக், புக்கிட் மேராக் அணைக்கட்டிலும் நீர் மட்டம் அபாய அளவை எட்டியுள்ளதால், அங்கு நிலைமையைச் சீர் செய்ய அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, நட்மாவின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குனர் மியோர் இஸ்மாயில் மியோர் அகிம் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, அவ்விரு அணைக்கட்டுகள் அமைந்துள்ள பகுதிகளிலும் இரண்டாவது நாளாக இன்று மேக விதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வேளை ; கூடிய விரைவில் அப்பகுதிகளில் மழை பொழியும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக மியோர் இஸ்மாயில் சொன்னார்.

எனினும், பலத்த காற்று செயற்கை மழையை பொழிவிக்கும் நடவடிக்கைக்கு சவாலாக அமைந்துள்ளதாக அவர் சொன்னார். குறிப்பாக, காற்றால் மேகங்கள் இலக்கிடப்பட்ட பகுதியை விட்டு நகர்ந்து செல்லும் சூழல் காணப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வேளையில், இன்று மாலை மணி 2.30 வாக்கில், 15 அதிகாரிகளின் உதவியோடு, சுமார் ஆயிரம் லிட்டர் உப்பு நீர் கரைசலை கொண்டு மேக விதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வானிலை ஆய்வுத் துறையின் வளிமண்டல, மேக விதைப்பு பிரிவின் இயக்குனர் டாக்டர் அஹ்மாட் பைருட்ஸ் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!