
கோலாலம்பூர், ஆகஸ்ட்-17- கோலாலம்பூர், செராஸ், Alam Damaiயில் நேற்று இரண்டு அடுக்குமாடி வீடொன்று தீயில் சேதமடைந்தது. Jalan Murni 10-ல் உள்ள தொழுகையிடத்தின் அருகே ஏற்பட்ட அத்தீ விபத்து குறித்து அதிகாலை 5.03 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்த போது அந்த இரண்டு அடுக்குமாடி வீடு தீயால் சூழப்பட்டிருந்ததைக் கண்டனர். இருளில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடிய நிலையில், வீட்டின் கூரையிலிருந்து தீப்பிழம்புகளும் அடர்த்தியான ஆரஞ்சு நிறப் புகையும் வெளியேறுவதை சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.
தீ அணைக்கப்பட்டதும் வீட்டின் முன்புறம் கருகிய இடிபாடுகளுக்கு இடையே மோசமாக எரிந்து போன வாகனம் ஒன்றும் காணப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுவாசக் கருவிகளின் உதவியுடன் தண்ணீர் குழாய்களில் நீரைப் பாய்ச்சி காலை 6.41 மணிக்கு ஒருவழியாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அச்சம்பவத்தில் உயிரிழப்பும் ஏதும் ஏற்படவில்லை. வீட்டின் முன்புறம் மின்னூட்டப்பட்டுக் கொண்டிருந்த மின்சார வாகனமொன்றில் இருந்து ஏற்பட்ட தீப்பொறி தீ பரவக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.



