
சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மோதல் புதிதல்ல. ஆனால் இப்போது அரசியல் விவாதத்தின் புதிய ‘ஹாட் டாபிக்’ — தமிழில் எண்களை எப்படி வாசிப்பது?சில நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் மரிய வில்சன். இப்போது முதலமைச்சர் விஜய்.
அடுத்தடுத்து இருவரும் எண்களை தமிழில் வாசிக்கும்போது தடுமாறிய நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒரே கேள்விதான் சுற்றி வருகிறது:“TVK-க்கும் நம்பருக்கும் ஏதாவது ஏழாம் பொருத்தமா?” என்பதுதான் அது.
சுதந்திர தின உரையில் முதலமைச்சர் விஜய், விவசாயக் கடன் தள்ளுபடி தொகையை “ஐயாயிரத்து தொண்ணூற்று முப்பத்திரண்டு புள்ளி இருபத்து மூன்று கோடி” (5,932) என வாசித்தார்.
அதனை ஐயாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்திரண்டு புள்ளி இரண்டு மூன்று” என்று விஜய் கூறியிருக்க வேண்டும்.இதுதான் இப்போது நெட்டிசன்களின் மத்தியில் வைரல்!இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்புதான் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு சட்டமன்றத்திலேயே விவாதப் பொருளானது.பட்ஜெட் உரையில் (40,412) நாற்பதாயிரத்து நானூற்று பன்னிரண்டு எனும் எண்ணை அவர்,
“நாற்பதாயிரத்து நாற்பத்தி பன்னிரெண்டு” என வாசித்தது விமர்சனமாக எழுந்தது.
அவரது தமிழ் உச்சரிப்பு குறித்தும் சட்டமன்றத்தில் கேள்விகள் எழுந்தன. கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நிதியமைச்சரின் தமிழ் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற வகையில் விமர்சனம் முன்வைத்தார்.
தனது தமிழ் குறித்து சட்டமன்றத்தில் எழுந்த விமர்சனத்துக்கு பதிலளித்த மரிய வில்சன், தனது பேச்சு பாணியை மாற்றிக் கொள்ள முடியாது என ஆவேசமாகப் பதிலளித்தார். தனது கல்விப் பின்னணி மற்றும் கிறிஸ்துவ வளர்ப்பு குறித்தும் அவர் பேசியது, மொழி குறித்த விவாதத்தை வேறு திசைக்குக் கொண்டு சென்றது.
அதைத் தொடர்ந்து அவரது கருத்துகள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தின. “தமிழ் உச்சரிப்பைச் சுட்டிக்காட்டியதற்கு மதம் ஏன் பதிலாக வருகிறது?” என்ற கேள்வியும் பரவலாக எழுந்தது.
மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பை வைத்து சூடாகிய அரசியல் களம் தணிவதற்குள் முதலமைச்சர் விஜய்யின் சுதந்திர தின உரையின் நம்பர் உச்சரிப்பு சிக்கிக்கொண்டது.அவ்வளவுதான்!
சமூக ஊடகங்களுக்கு அடுத்த ‘கன்டென்ட்’ கிடைத்துவிட்டது.“TVK நம்பரில் நம்பரில் வீக்கா?”எனும் வகையில் கிண்டல்கள் பறக்கின்றன.இதில் இன்னும் ஒரு அரசியல் ‘கணக்கு’ நெட்டிசன்களுக்கு சேர்ந்து கொண்டது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் TVK 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.
இதையும் இப்போதைய உச்சரிப்பு சர்ச்சையையும் சேர்த்து சிலர் “சட்டமன்றத்திலேயே நம்பர் பிரச்சினை… பட்ஜெட்டிலும் நம்பர் பிரச்சினை… சுதந்திர தின உரையிலும் நம்பர் பிரச்சினை… TVK-க்கு எண்கள்னாலே பெரும் சிக்கலா?” என நகைச்சுவையாகக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.



