
கோலாலம்பூர், ஏப்ரல்-21-செராஸில் ஒரு கேளிக்கை மையத்தில் இம்மாதத் தொடக்கத்தில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில், 33 பேருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையுடன் சேர்த்து, அவர்களுக்கு தலா 10 மாதச் சிறைத்தண்டனை விதித்து கோலாலாம்பூர் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
ஏப்ரல் 5 சம்பவத்தில், சுடும் ஆயுதங்கள், தோட்டாக்கள், வெடிப்பொருட்கள், மரக்கட்டைகள், கற்கள் என பல்வேறு ஆயுதங்களுடன் அங்குக் கலவரத்தில் ஈடுபட்டதாக, 19 வயது முதல் 57 வயதிலான 34 பேர் முன்னதாக மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
அவர்களில், 32 பேருக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி மேஜிஸ்திரேட் நீதிமன்றம் தலா 3,000 ரிங்கிட் அபராதம் விதித்தது; 19 வயதிலான மேலுமிரு ஆடவர்களுக்கு தலா 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
அனைவருமே அபராதத்தைச் செலுத்தி விட்டனர்.
ஆனால், சுடும் ஆயுதங்களை வைத்திருந்தக் குற்றங்களுக்கு இந்தத் தண்டனை போதுமானதாக இல்லை என அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்ததை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், இன்று இத்தீர்ப்பை வழங்கியது.
இவ்வேளையில், இன்று நீதிமன்றம் வராத எஞ்சிய நபரான A. கணேசனுக்கு நீதிபதி கைது ஆணைப் பிறப்பித்துள்ளார்.



