கோலாலம்பூர், ஏப்ரல்-10, அண்மையில் சேவைத் தடங்களுக்கு ஆளான நாட்டின் இரு முக்கிய வங்கிகள் அப்பிரச்னை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என பேங் நெகாரா உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கான வங்கிச் சேவைகள் பாதிக்கப்படுவதைக் கடுமையாகக் கருதுவதாக அந்த மத்திய வங்கி அறிக்கையொன்றில் கூறியது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு உரிய வகையில் உதவிட அவ்விரு வங்கிகளும் ஆவன செய்ய வேண்டும்.
சேவைப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் புகார்களும் விரைந்து கவனிக்கப்பட வேண்டும் என பேங் நெகாரா பணித்துள்ளது.
அதோடு, மீண்டும் இது போன்றதொரு சேவைப் பாதிப்பு நிகழாதிருக்க அவை எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தாக வேண்டும் என பேங் நெகாரா கூறியது.
வங்கிச் சேவை எல்லா நேரமும் மக்களுக்கு தங்குத் தடையின்றி கிடைப்பதை வங்கிகள் உறுதிச் செய்ய வேண்டும்.
தவறினால் அணுக்கமானக் கண்காணிப்பு நடவடிக்கையில் தாங்கள் இறங்க வேண்டி வரும் என்றும் மத்திய வங்கி எச்சரித்தது.
முன்னதாக, தங்களின் இணையப் பரிவர்த்தனை, ATM அட்டைகள், கடன் பற்று அட்டைகள் உள்ளிட்ட சேவைகளில் இடையூறு ஏற்பட்டதாக CIMB, Maybank ஆகிய இரு முக்கிய வங்கிளும் அறிவித்திருந்தன.
மணிக்கணக்கில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களும் சமூக ஊடகங்களில் தங்களின் விரக்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
எனினும் பாதிக்கப்பட்ட சேவைகள் கட்டங்கட்டமாங அன்றைய நாள் இரவே வழக்கத்திற்குத் திரும்பின.