புதுடெல்லி, ஏப்ரல் 19 – வீட்டு உரிமையை மாற்றித் தர மறுத்ததற்காக, இந்தியாவில் பெண் ஒருவர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பெண் அடிக்கப்பட்டது மட்டுமின்றி, கட்டி வைத்து, வாயில் ஒட்டும் நாடாவை திணித்து, கண்களில் மிளகாய் பொடி தூவி கொடூரமாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள, குணா மாவட்டத்தில், கடந்த செவ்வாய்கிழமை அச்சம்பவம் நிகழ்ந்ததை, போலீஸ் உதவி கண்காணிப்பாளர் மான் சிங் தாக்கூர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்டவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் கடந்த ஈராண்டுகளாக நெருங்கி பழகி வந்ததாகவும், ஆனால், சமீபத்தில் அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் மான் சிங் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, அப்பெண்ணின் தாயாரின் பெயரில் இருந்த மூதாதையரின் வீட்டு உரிமையை, தமது பெயருக்கு மாற்றி தருமாறு மிரட்டி, அவன் அப்பெண்ணை கட்டி வைத்து, கண்ணில் மிளகாய் பொடி தூவி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
தற்சமயம், அவ்வாடவனின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அப்பெண்ணை கொடுமை படுத்திய ஆடவன் கைதுச் செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளை ; அவனது வீட்டிலிருந்து கள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதையும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.