
தாப்பா, மார்ச் 25 – கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவிலுள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் விவகாரத்தினால் , பேரா மாநிலத்தில் ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்களின் ஆதரவு பாதிக்காது என ம.இ.காவின் துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ எம். சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் குரல் கொடுத்திருக்காவிட்டால், இது தொடர்பான தாக்கம் அதிகமாக இருந்திருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் இந்த ஆலய விவகாரத்தில் இந்திய சமூகத்தினரிடமிருந்து நாங்கள் அதிகமான கருத்துக்களை பெறுகிறோம்.
அவர்களை அமைதிப்படுத்துவதற்கும் சுமூகமான முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியாகவும் எங்களது நடவடிக்கை இருப்பதாக சரவணன் தெரிவித்தார்.
தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் படிவம் 5 மற்றும் படிவம் 6 பயிலும் 1,029 மாணவர்களுக்கு ராயா அன்பளிப்புகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது சரவணன் இத்தகவலை வெளியிட்டார். இந்த ஆலய விவகாரத்தில் அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியிருப்பதோடு நம்பிக்கை கொண்ட மக்கள் பிரதிநிதிகளும் இருப்பதால் நல்ல தீர்வு கிடைக்கும் என மக்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.
இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகம், இன வேறுபாடின்றி நாட்டு மக்களுக்கு அரசாங்கம் சிறந்ததைச் செய்யும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் கூறினார். இன பாகுபாடு இன்றி மலேசியர்களுக்கு சிறந்ததைச் செய்ய அரசாங்கத்தின் தலைமைத்துவத்தின் மீது நாங்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளோம். இஸ்லாம் அதிகாரப்பூர்வ சமயமாக இருந்தாலும் , பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்களாகவும் உள்ள இந்த நாட்டை நாங்கள் மதிக்கிறோம்.
அரசாங்கம் அளித்த முடிவு மற்றும் உத்தரவாதங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்பதோடு கவலைப்படத் தேவையில்லை என்றும் சரவணன் தெரிவித்தார்.