குளுவாங், ஆகஸ்ட் -4, ஜோகூர், குளுவாங், கஹாங்கில் உள்ள ரப்பர் தோட்டமொன்றில் நேற்று காலை ரப்பர் மரம் சீவிக் கொண்டிருந்த மூதாட்டி காட்டு யானையால் மிதித்து கொல்லப்பட்டதை அடுத்து, கம்போங் ஸ்ரீ லுக்குட் கிராம மக்கள் பெரும் பீதியில் உறைந்துப் போயுள்ளனர்.
பெரும் அச்சத்தில் வாழும் கிராம மக்கள் சம்பவ இடமான ரப்பர் தோட்டம் அருகே எங்கும் செல்வதற்கும் கூட தயங்குவதாக, சுமார் 1,800 பேர் வசிக்கும் கிராமத்தின் தலைவர் யூசோஃப் இப்ராஹிம் (Yussof Ibrahim) தெரிவித்தார்.
அருகாமையில், சுமார் 20-30 யானைகள் இதுநாள் வரை சுற்றித் திரிந்த செம்பனைத் தோட்டத்தில் மரங்கள் வெட்டப்படுவதால், யானைகள் ரப்பர் தோட்டத்திற்குள் புகுந்து விடுகின்றன.
யானைகள் நுழையா வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தோட்ட உரிமையாளர்களை வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா துறையான PERHILITAN ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
தோட்டத்தைச் சுற்றி வடிகால் அமைத்து மரங்களை வெட்டுவதும் அதிலடங்கும்.
நாங்கள் யாரையும் பழி சொல்லவில்லை; ஆனால் மரங்களை வெட்டும் போது தோட்ட உரிமையாளர்கள் அது குறித்து தெரிவித்தால் நாங்களும் எச்சரிக்கையாக இருப்போம் என யூசோஃப் சொன்னார்.
யானையை கிராம மக்கள் விரட்ட முயன்றதன் நேரடி விளைவே, நேற்றையை அத்தாக்குதலா என கேட்ட போது, எங்களுக்கு வேறு வழியில்லை என மட்டுமே யூசோஃப் பதிலளித்தார்.
சில நேரங்களில் அவை மிக நெருக்கத்தில் வந்து விடுவதால், டயர்களை எரித்தும் பட்டாசுகளை வெடித்தும் நாங்கள் விரட்ட வேண்டியுள்ளது.
வீட்டுக் கண்ணாடி வழியாக யானை தன் தும்பிக்கையை நீட்டி அலற விட்ட சம்பவங்களும் உண்டு என்கிறார் யூசோஃப்.
Misirah Saniman எனும் 75 வயது மூதாட்டி நேற்று காலை ரப்பர் மரம் சீவிக் கொண்டிருந்த போது, காட்டு யானையால் மிதியுண்டார்.
எலும்புகள் உடைந்து, மோசமான உட்காயங்களுக்கு ஆளாகி அவர் உயிரிழந்தார்.
இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாதிருக்க PERHILITAN உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தங்களின் எதிர்பார்ப்பு என யூசோஃப் மேலும் கூறினார்.