ஜோகூர் தேர்தல்: வைரலாகும் DAP வேட்பாளர் பட்டியல் போலியானது – தியோ நீ சிங் விளக்கம்

ஜோகூர் பாரு, ஜூன்-3-ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான DAP வேட்பாளர்கள் எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் பட்டியல் முற்றிலும் போலியானது என, ஜோகூர் DAP தலைவர் தியோ நீ சிங் (Teo Nie Ching) தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, 16-ஆவது மாநிலத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், DAP போட்டியிடவிருக்கும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் என்ற பெயரில் பட்டியல் ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள தியோ நீ சிங், கட்சித் தலைமை இன்னும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பட்டியலை இறுதிச் செய்யவில்லை என்றும், பரப்பப்படும் பட்டியல் வெறும் வதந்தி என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் Marina Ibrahim தமக்கு வழங்கப்பட்ட மாற்றுத் தொகுதியான Tiram தொகுதியையும், அரசு சாரா சட்டப்பூர்வ அமைப்பின் தலைவர் பதவியையும் நிராகரித்ததாகக் கூறப்படும் கடிதம் வைரலானது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், DAP தங்களுக்குச் சாதகமான நகர்ப்புறத் தொகுதிகளில் மலாய் வேட்பாளர்களைக் களம் இறக்க வியூகம் அமைத்து வருவதாகக் குறிப்பிட்ட தியோ நீ சிங், Marina-வுக்குப் பொறுப்புகள் வழங்க முன்மொழிந்தது உண்மைதான் என்றும், ஆனால் தற்போதைய வேட்பாளர் பட்டியல் விவகாரங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.



