Latestமலேசியா

டத்தோ டாக்டர் ஞான பாஸ்கரனின் ‘வரலாறு கண்ட சகாப்தம் – 3 தலைமுறையின் பயணம்’ நூல் வெளியீட்டு விழா

கோலாலம்பூர், மார்ச் 20 – கடந்த 55 ஆண்டுகளாக அரசியல், சமூகம், பொதுச் சேவை, மருத்துவம் என பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அளப்பரிய சேவைகளை வழங்கியவர்தான் டத்தோ டாக்டர் என். ஞானபாஸ்கரன்.

ஜோகூர் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஞானபாஸ்கரனின் தந்தையார் நடேசன் செட்டியார், மஇகா-வில் இணைந்து அரசியலிலும், அதே சமயத்தில் பல்வேறு சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்.

தந்தையின் சமூக சேவைப் பாதையை பின்தொடர்ந்த டாக்டர் பாஸ்கரன், தன் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளின் சமுதாய பங்களிப்பையும் அரசியல் ஈடுபாட்டையும் வணிகம் சார்ந்த மற்ற துறைகளின் செயல்பாட்டையும் விரிவாக விளக்கும் சுய வரலாற்று நூலை ஒன்றை எழுதியுள்ளார்.

‘இந்த நாட்டில் வாழ்ந்ததையும் இந்த நாட்டுக்காக செய்த தியாகத்தையும் ஒவ்வோர் இந்தியனும் ஆவணப்படுத்த வேண்டும். இதுதான் இந்நூல் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட மகத்தான முயற்சியாகும்’ என வணக்கம் மலேசியாவிடம் அவர் தெரிவித்தார்.

குடும்பப் பயணத்தை ஆவணப்படுத்த வேண்டும் என்று எடுக்கப்பட்ட முயற்சிதான் வரலாறு கண்ட சகாப்தம்; மூன்று தலைமுறையின் பயணம் எனும் நூல்.

ஆங்கிலத்தில் ‘A Legacy of Time: Tale of 3 Generations’ என்ற தலைப்பில், இரு மொழிகளிளும் ஒரே நேரத்தில் இந்த நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன.

இந்த நூல் வெளியீடு எதிர்வரும் மார்ச் 31 ஆம் தேதி, மதியம் 3 மணிக்கு பெட்டாலிங் ஜெயா தோட்டமாளிகையில் பல பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு பொதுமக்கள் அனைவரும் வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட டாக்டர் பாஸ்கரன், இந்த நூல் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் தொகை பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிதிகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!