Latestமலேசியா

டாக்டர் பி. ராமசாமியின் தலைமையில் உரிமை இயக்கம் தொடக்கம்

கோலாலம்பூர், நவ 27 – பினாங்கு மாநில முன்னான் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி தலைமையில் உரிமை என்னும் இயக்கம் நேற்று கோலாலம்பூர் ஜாலான் பண்டாரில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் தொடங்கப்பட்டது.

விரைவில் உரிமை என்ற பெயரில் அரசியல் கட்சி அமைக்கப்படுவதால் அதன் தொடக்க அங்கமாகவே இந்த உரிமை இயக்கம் அறிமுகப்படுத்பட்டுள்ளதாக ராமசாமி தெரிவித்தார்.

இந்த இயக்கத்தின் அமைப்புக் கூட்டம் முதலில் பிரிக்பீல்ஸ் டெம்பள் ஒஃவ் பைன் ஆட்ஸ் கட்டிடத்தில் நடைபெறவிருந்தது. ஆனால் போலீசாரின் அழுத்ததத்தில் அங்கு இந்த கூட்டம் நடத்த முடியவில்லை என அவர் கூறியிருந்தார்.

இறுதியில் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா, உரிமை இயக்கத்தின் கூட்டத்தை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடத்துவதற்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அக்கூட்டம் அங்கு நடைபெற்றது.

உரிமை கட்சிக்கான விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கு முன்னதாக இந்த இயக்கம் கோலாலம்பூருக்கு அடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் அறிமுகப்படுத்தவிருப்பதவும் ராமசாமி தெரிவித்தார்.

இப்போதுள்ள பல்லின கட்சிகளில் சிறந்த தலைமைத்துவமும் மற்றும் பல இனங்களை பிரதிபலிக்கும் முழுமையான பிரதிநிதித்துவமும் இல்லை என்பதால் உரிமை கட்சி அமைக்கப்படுவதாக ராமசாமி கூறினார்.

இந்தியர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு உரிமைகளை பெற வேண்டும் என்பதுதான் உரிமை இயக்கத்தின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. இந்தியர்களை அடிப்படையாக கொண்ட இயக்கமாக இது இருந்தாலும் யார் வேண்டுமானாலும் இதில் இணையலாம். நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டபோதிலும் இந்தியர்களுக்கு இன்று அரசியலில் சரியான பிரதிநிதித்துவம் இல்லை. அதனை நாங்கள் வழங்குவோம். மக்கள் கோரிக்கையை நாங்கள் எழுப்புவோம் என்றும் டாக்டர் ராமசாமி கூறினார்.

இதனிடையே இந்த அறிமுக நிகழ்ச்சியில் உரிமை இயக்கத்திற்கான மாநில ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டது.

பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநில ஒருங்கிணைப்பாளராக டாக்டர் ராமசாமியும் பினாங்கு மாநிலத்தில் அவருக்கு உதவியாக டாக்டர் ஷம்ஷேர் சிங் திந்த்னும் இருப்பார். மேலும் கெடா, மலாக்கா ஆகிய மாநிலங்களுக்கு ஒருங்கிணைப்பாளராக டேவிட் மார்ஷலும், பேரா மாநிலத்திற்கு சதிஷ் முனியாண்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கு சரவணன் நாகையாவும் பஹாங் மாநிலத்திற்கு சபாய் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ மற்றும் ஜொகூர் மாநிலத்திற்கு கிருஷ்ணசாமி , மோகன் கிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!