Latestமலேசியா

வயதுக் குறைந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி: இளைஞனுக்கு சிறை

மூவார், பிப்ரவரி 20 -வயது குறைந்தப் பெண்ணுக்கு வாட்சாப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆடவனுக்கு மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

சிறார் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

ஈராண்டுகளுக்கு முன் மூவார், பக்ரியில் உள்ள வீட்டில் அக்குற்றத்தைப் புரிந்ததை, ஜாஹிருல் ஹாக் அப்துல் ரஃபாயி நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டான்.

சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 15 வயது தான்; அறிமுகமாகி ஒரு மாதமே ஆன நிலையில், அப்பெணுக்கு அவன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியிருக்கிறான்.

அப்பெண்ணின் அக்காள் சந்தேகப்பட்டு, அவளது கைப்பேசியை வாங்கி பரிசோதித்ததில், அவ்வாடவனிடம் இருந்து ஆபாச குறுஞ்செய்திகள் வந்திருப்பது அம்பலமானது.

தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மேற்கொண்ட சோதனையில், அந்த ஆபாச செய்திகள், குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் இருந்து வந்தவையே என்பது உறுதிச்செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2017 சிறார் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ், அக்குற்றத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத் தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டு.

எனவே, பொது நலனைக் கருத்தில் கொண்டு குற்றவாளிக்கு தக்க தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரசு தரப்பு நீதிபதியைக் கேட்டுக் கொண்டது.

எனினும், தனது பெற்றோரை தாம் தான் கவனித்துக் கொள்ள வேண்டுமென்பதால், சற்று கருணைக் காட்டுமாறு நீதிபதியிடம் அவன் முறையிட, நீதிபதி அவனுக்கு நான்கு மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தண்டனை இன்று முதல் நடப்புக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!