சென்னை, மே 10 – “ராட்வைலர்” உட்பட 23 வகையான நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்களை இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்யவும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்யவும், அவற்றின் அனைத்து வகை பயன்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
தற்போது வளர்ப்பு பிராணியாக அவ்வகை நாய்களை வைத்திருப்பவர்கள் அவற்றை உடனடியாக ஆண், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட நாய்கள் பட்டியலில், பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வைலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் ஆகியவையும் அடங்கும்.
அதே சமயம், தற்போது அவ்வகை நாய்களை வளர்ப்பவர்கள் அல்லது வைத்திருப்பவர்கள், அவற்றை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முககவசம் அணிவித்து அழைத்து செல்லவேண்டும்.
நல்ல தரமான கழுத்துப்பட்டை, தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, செல்லப் பிராணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே ஆறாம் தேதி, சென்னையில், ஐந்து வயது சிறுமி ஒருவரை, ராட்வைலர் இனத்தை சேர்ந்த இரு வளர்ப்பு நாய்கள், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாக்கிய சம்பவம் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளதை அடுத்து, அரசாங்கம் அந்த அதிரடி தடையை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.