புத்ராஜெயா, ஆகஸ்ட்-1, தியோ பெங் ஹோக் (Teoh Beng Hock) மரணம் குறித்த விசாரணைக் கோப்புகளை மீண்டும் திறக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இம்முறை விசாரணை மேலும் வெளிப்படையாகவும், நியாயமாகவும் இருக்குமென்பதற்கான உத்தரவாதத்தை வழங்குவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
விசாரணையில் யாரின் தலையீடும் இருக்காது என்றார் அவர்.
இன்று புத்ராஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில் பெங் ஹோக்கின் குடும்பத்தாருடன் பிரதமர் நடத்திய சந்திப்பின் போது, அரசாங்கத்தின் அம்முடிவு தெரிவிக்கப்பட்டது.
சுமார் 30 நிமிடங்களுக்கு நடைபெற்ற அச்சந்திப்பின் போது, அன்னாரின் மரணத்துக்கு நியாயம் கேட்டு அவரின் குடும்பத்தார் நீண்ட காலமாக போராடி வருவதை தாம் நன்குணருவதாக டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.
2009-ல் அப்போதைய சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் இயன் யோங் ஹியான் வாவின் (Ean Yong Hian Wah) அரசியல் செயலாளரான 30 வயது பெங் ஹோக், ஷா ஆலாம், பிளாசா மாசாலாமில் ஐந்தாவது மாடியில் இறந்துக் கிடக்கக் காணப்பட்டார்.
அதற்கு முன்பாக, அவர் அங்கு 14-வது மாடியிலுள்ள சிலாங்கூர் MACC அலுவலகத்தில் வாக்குமூலம் கொடுக்கச் சென்றது குறிப்பிடத்தக்கது.
பெங் ஹோக்கின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரின் குடும்பத்தினர் பல்வேறு நீதிமன்றப் படிகளை ஏறியிறங்கியும், அவர்கள் எதிர்பார்த்த முடிவு வராததால், கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.