
கோலாலம்பூர், அக்-30-இவ்வாண்டு தீபாவளி நவம்பர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடும் நிலையில், இந்து அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய அரசுப் பணியாளர்கள் தங்களுக்கான பதிவு செய்யப்படாத விடுப்பையும் செவ்வாய்க்கிழமை பயன்படுத்த அனுமதிக்குமாறு அவர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2018-ஆம் ஆண்டு முதல், இந்து அரசு ஊழியர்கள் தீபாவளிக்காக ஒரு நாள் பதிவு செய்யப்படாத விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2024-ஆம் ஆண்டு முதல், அந்த விடுப்பைப் பண்டிகைக்கு முந்தைய நாளிலோ அல்லது பிந்தைய நாளிலோ பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதுடன், திங்கட்கிழமை அதற்கான பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, கூடுதல் விடுப்பைப் பயன்படுத்துவதில் அரசு ஊழியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக லிங்கேஸ்வரன் தெரிவித்தார். பண்டிகைக்கு முந்தைய நாளும் பிந்தைய நாளும் ஏற்கெனவே விடுமுறை என்பதால், வழக்கமான நடைமுறையின்படி அந்த விடுப்பைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே, இந்து அரசு ஊழியர்களுக்கு மட்டும் சிறப்பு விலக்கு அளித்து, செவ்வாய்க்கிழமை அந்த விடுப்பைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு பொது சேவைத் துறையான JPAவுக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என லிங்கேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
இதற்கு முன் 2023-ஆம் ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வந்தபோது, JPA சிறப்பு அனுமதி வழங்கி இந்து அரசு ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை விடுப்பைப் பயன்படுத்த அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.



