
பூச்சோங், அக்-30-சிலாங்கூர், பூச்சோங் அருகே உள்ள கிடங்கு ஒன்றில் நேற்று நள்ளிரவு நடத்தப்பட்ட சோதனையில், ஹலால் நடைமுறைகளைப் பின்பற்றாமல் பதப்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 6.5 டன் கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
Ops Taring Chiller சோதனை நடவடிக்கையில், கோழிகளை அறுத்துப் பதப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 12 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகியவை இணைந்து அச்சோதனையை நடத்தின.
முதற்கட்ட விசாரணையில், கோழிகள் அறுக்கப்படுவதற்கு முன்பே அவை இறக்கும் வரை சுடுநீரில் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளதாக புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது அமைதித் துறை அதிகாரி Datuk Mohd Zaki Ashar தெரிவித்தார்.
மொத்தம் 468 பிளாஸ்திக் பைகளில் வைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சியின் மதிப்பு 85,400 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை Sepang பகுதியிலுள்ள கோழிப் பண்ணைகளிலிருந்து பெறப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள உணவகங்கள், சில்லறைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
அச்சம்பவம் 2011 ஹலால் வரையறை தொடர்பான வர்த்தக விவகார உத்தரவு, 1974 சுற்றுச்சூழல் தரச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் குடிநுழைவு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.



