Latestமலேசியா

வணிக வளாகத்திலுள்ள ஆடம்பர KTV மையத்தில் சோதனை; 35 வெளிநாட்டவர்கள் கைது

கிள்ளான், அக்-30-சிலாங்கூர், கிள்ளானில் வணிக வளாகமொன்றின் ஏழாவது மாடியில் செயல்பட்டு வந்த ஆடம்பர கராவோக்கே (KTV) மையத்தில் நேற்று இரவு சிலாங்கூர் குடிவரவுத் துறையினர் நடத்திய சோதனையில், 35 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கு வாடிக்கையாளர்களை உபசரிக்கும் பெண்கள் சேவை வழங்கப்பட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்பைத் தொடர்ந்து, இரவு 11.10 மணியளவில் அச்சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது, மையத்தின் பின்புறத்தில் அமைந்திருந்த ஓய்வறையில் வெளிநாட்டுப் பெண்கள் வாடிக்கையாளர்களின் முன்பதிவுக்காகக் காத்திருந்தது கண்டறியப்பட்டது. அதோடு வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களை ஏற்பாடு செய்யும் பணியை ‘கேப்டன்’ என அழைக்கப்படும் நபர் கவனித்து வந்ததும் தெரிய வந்தது.

தடுத்து வைக்கப்பட்டவர்களில் 23 பேர் ஆண்கள். 12 பேர் பெண்கள். அவர்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என சிலாங்கூர் குடிநுழைவுத்துறை தற்காலிக இயக்குநர் Mohmad Khusairi Kamarudin தெரிவித்தார். சீனா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் விருந்தினர் தொடர்பு அதிகாரிகளாக வேலை செய்து வந்திருக்கலாம் சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். கைது செய்யப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகளாக நாட்டிற்குள் நுழைந்தவர்கள். சிலர் அண்மையில்தான் மலேசியா வந்துள்ளனர்.

கைதான 35 பேரும் மேல் விசாரணைக்காக 1959/63-ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் Semenyih குடிநுழைவு தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட KTV மையம் இரவு 8 மணி முதல் அதிகாலை வரை செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அங்கு வாகன நிறுத்துமிடம் மற்றும் கட்டிட நுழைவாயிலைக் கண்காணிக்கும் குறைந்தது இரண்டு CCTV கட்டுப்பாட்டு அறைகளும் கண்டறியப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!